search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விடைத்தாள் ஊழல்"

    அண்ணா பல்கலைக்கழகத்தில் விடைத்தாள் மறுகூட்டலில் நடந்துள்ள மோசடிக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டு பெண் அதிகாரி ஜி.வி.உமா கூறியுள்ளார். #AnnaUniversity
    சென்னை:

    அண்ணா பல்கலைக்கழகத்தின் விடைத்தாள் திருத்த மோசடி தொடர்பாக அதன் முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஜி.வி.உமாவின் கோட்டூர்புரம் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினார்கள். அவர் மீது வழக்கும்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    இதுபற்றி உமாவிடம் கேட்டபோது அவர் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்தார். இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டி வருமாறு:-

    கே:- விடைத்தாள் மறு கூட்டலுக்கு ரூ.10 ஆயிரம் வீதம் லஞ்சம் பெற்ற வழக்கில் உங்கள் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளதே?

    ப:-அது முழுவதும் தவறான தகவல். இந்த ஊழலில் எனக்கு எந்த தொடர்பும் இல்லை. கீழ் மட்டத்தில் நடந்து இருந்தால் அது பற்றி எனக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. எந்தப் பணப் பரிமாற்றத்துடன் எனக்கு தொடர்பு இல்லை.

    கே:- தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி என்ற முறையில் 2017-ம் ஆண்டு 1100 தேர்வாளர்களை நீக்கி இருக்கிறீர்கள். மதிப்பெண்கள் ஆரம்பத்தில் போடப்பட்டதற்கும், மறு கூட்டலில் போடப்பட்ட மதிப்பெண்களுக்கும் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளதே?

    ப:- நான் சீர்த்திருத்தங்கள் கொண்டு வந்ததற்காக என்னை குறிவைத்து இருக்கிறார்கள். அதில் இருந்து நான் விடுபடுவேன். மறுகூட்டல் தொடர்பான விவரங்களை வெளிப்படை தன்மையுடன் வெளியிட்டு இருக்கிறேன். 10 ஆண்டு புள்ளி விவரங்களும் கொடுக்கப்பட்டு உள்ளது. இதில் மறைப்பதற்கு எதுவும் இல்லை. மூத்த அதிகாரிகள் ஒப்புதலுடனேயே நான் சீர்திருத்தங்கள் கொண்டு வந்தேன். சரியான நடைமுறைகளை அமல்படுத்தினேன். அதற்கு முன் இது முறையாக வரையறுக்கப்படவில்லை.

    மறுகூட்டல் தொடர்பாக பேராசிரியர்கள் அளித்த மதிப்பெண்கள் தொடர்பாக அவர்களிடம் அபிடவிட் பெறப்பட்டுள்ளது.

    கே:- இதுதொடர்பாக துணைவேந்தர் உங்களிடம் பேசினாரா?

    ப:- நான் துணை வேந்தரை நேற்று காலை நேரில் சந்தித்து விளக்கம் அளித்து இருக்கிறேன்.

    ஒரே விடைத்தாளுக்கு 2 ஆசிரியர்கள் ஒரே மாதிரியாக மதிப்பெண் வழங்குவது இல்லை. மாநில அளவில் 64 லட்சம் விடைத்தாள்களில் 16,000 விடைத்தாள்களில் மட்டுமே மதிப்பெண்கள் மாறுபட்டு இருக்கிறது.

    கே:- தோல்வி அடைந்த 73,000 மாணவர்கள் மறுகூட்டலுக்கு பின்பு தேர்ச்சி பெற்று இருக்கிறார்களே?

    ப:- நான் மதிப்பெண்கள் மாறுபட்டு இருப்பதை மட்டும் தான் சொல்கிறேன்.

    இந்த முறைகேட்டை நாங்கள் தான் கண்டுபிடித்தோம். இதுதொடர்பாக 1040 தேர்வாளர்கள் மீது கடந்த ஆண்டு நடவடிக்கை எடுத்து இருக்கிறோம். இதுநடந்து பல மாதங்கள் ஆன பின்பு இது வெளிச்சத்துக்கு வந்து இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. மறு மதிப்பீட்டில் மதிப்பெண்களில் வந்த வித்தியாசம் தொடர்பாக 1040 பேர் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முறைகேட்டில் ஈடுபட்ட தேர்வாளர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

    இனிவரும் காலங்களில் அவர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

    முறைகேட்டில் ஈடுபட்ட தேர்வாளர்கள் தவிர மற்றவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #AnnaUniversity
    ×